தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புக்கான மருத்துவம் :
மழை, குளிர் காலங்களில் பூஞ்சை காளான்களால் தோலில் அரிப்பு, புண்கள் ஏற்படும். குப்பைமேனி, மா இலை, சீமை அகத்தி ஆகியவற்றை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு, தொற்று பிரச்னைகளை தீர்ப்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட குப்பைமேனி எல்லாவித தோல்நோய்களுக்கும் மருந்தாகிறது. ஒவ்வாமையை போக்கும் உன்னதமான மருந்தாக விளங்குகிறது. சீமை அகத்திக்கு வண்டுகொல்லி என்ற பெயர் உண்டு. இது தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. அரிப்பை அகற்ற கூடியது. மா மரத்தின் இலைகள் உள் மருந்தாகவும், மேல்பூச்சாகவும் பயன்படுகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை உடையது.
மா இலைகளை பயன்படுத்தி பூஞ்சை காளான் தொற்றை போக்கும் மருந்து தயாரிக்கலாம். மா இலையின் துளிர் இலைகளை நீர்விடாமல் அரைத்து எடுக்கவும். இதனுடன் தேங்காய் எண்ணெய் விட்டு தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை மேல்பூச்சாக போடும்போது பூஞ்சைகாளான் தொற்று நீங்கும். புண்கள் விரைவில் ஆறும். தீக்காயங்களுக்கும் மேல் பூச்சாக பயன்படுத்தலாம். மா இலைகளை காயவைத்து நெருப்பில் கருக்கி அதன் சாம்பலை எண்ணெயில் சேர்த்து கலந்து பூசிவர தோல்நோய்கள் சரியாகும். மழைகாலத்தில் அதிக நேரம் நீரில் நனையும்படி கால்களை வைத்திருப்பது, சேற்றில் நடந்து செல்வதால் விரல் இடுக்குகளில் கிருமிகள் தங்குவதால் அரிப்பு ஏற்படும்.
குப்பைமேனி இலைகளை பயன்படுத்தி மழைக்காலத்தில் தோல்களில் ஏற்படும் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் சிறிதளவு விளக்கெண்ணெய் விடவும். இதனுடன் குப்பைமேனி இலையை நீர்விடாமல் அரைத்து சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். தோலில் அரிப்பு, தடிப்பு இருக்கும் இடங்களில் இதை பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும். இந்த தைலம் காலாணி, சேற்றுப்புண்ணுக்கு மருந்தாகிறது. குப்பை போல இருக்கும் உடலை அழகு படுத்த கூடியது என்பதால் குப்பை மேனி என்ற பெயர் பெற்றது. குப்பையில் வளரக்கூடிய அற்புத மூலிகை. குப்பைமேனி அரிப்பை போக்க கூடியது. நெஞ்சக சளியை கரைக்க கூடியது. மேல்பற்றாக போடும் போது பூஞ்சை காளான்ளுக்கு மருந்தாகிறது.
சீமை அகத்தியை பயன்படுத்தி தோல்நோய்க்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் எடுக்கவும். இதனுடன், நீர்விடாமல் அரைத்து எடுத்த சீமை அகத்தி இலைகளை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை மேல்பூச்சாக பயன்படுத்தும்போது படை, சொரி, சிரங்கு போன்றவை குணமாகும். சொரியாசிஸ் நோயை சரிசெய்கிறது. சேற்றுப்புண்ணுக்கு மருந்தாகி பலன் தருகிறது. உள்ளங்கை, உள்ளங்கால்களில் எற்படும் வெடிப்பு, நகச்சொத்தை, நகச்சுற்று ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
சீமை அகத்தியானது அகத்தியின் வகையை சேர்ந்தது. அகத்தி கீரையை போன்று பெரிய வடிவத்தை பெற்றிருக்கும். மஞ்சள் நிற பூக்களை உடைய இது சாலையோரங்களில் வளரக்கூடியது. அடிக்கடி உண்டாகும் அலர்ஜியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். வேப்பங்கொழுந்தை அரைத்து சுண்டைக்காய் அளவுக்கு காலை வேளையில் 48 நாட்கள் சாப்பிட்டுவர அலர்ஜி சரியாகும். அலர்ஜி தொடர்பான நோய்களும் விரைவில் விலகிச் செல்லும்.
No comments:
Post a Comment