ஜவ்வாதுமலையில் கற்திட்டைகள் கண்டுபிடிப்பு
ஜவ்வாதுமலையில், தமிழ் துறையினர் நடத்திய ஆய்வில், கற்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி தலைமையில், சென்னை மாநில கல்லூரி ஆய்வு மாணவர்கள் கோவிந்தராஜ், வேந்தன் ஆகியோர், ஜவ்வாதுமலையில் ஆராய்ச்சி பணி மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, ஜவ்வாதுமலையில் உள்ள, 14 மலை கிராமங்களில் ஒன்றான கோம்பையில் உள்ள முருகன் கோவில் பின்புறத்தில், அகன்ற பாறைவெளியில், சிறிதும், பெரியதுமான, 15க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் காணப்பட்டன.
இதுகுறித்து, பேராசிரியர் மோகன் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: இந்த கற்திட்டைகள் கற்காலத்தை சேர்ந்தவை. பல கற்திட்டைகள் சேதமடைந்துள்ளன. இதன் மூலம், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே மக்கள் வாழ்ந்து வந்தது தெரியவருகிறது. சங்க நூல்களில், கற்திட்டைகள், கற்பதுக்கைகள் குறித்த செய்திகள் பரவலாக உள்ளன. கற்திட்டை, கற்பதுக்கை, கற்குவை ஆகியவை கற்கால சின்னங்களாகும். புதூர் நாட்டுக்கு உட்பட்ட மலை கிராமங்களில், நடுகற்கள், கல்வெட்டுக்கள், பழங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடாரிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. இப்போது, கற்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. இது போன்ற கற்திட்டைகள் கீழ்சேப்பினி, மண்டபப்பாறை, மேல்பட்டு ஆகிய இடங்களில் உள்ளன. எனவே, பழந்தமிழர்களின் வரலாற்று சின்னங்கள் உள்ள ஜவ்வாதுமலையை, அதன் பழமையான சின்னங்களை அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment