Saturday, March 4, 2017

இலவசமாக முளைத்துகிடக்கும் மூலிகை கரிசலாங்கண்ணி

நம் நெல் வயல் வரப்பு ஓரத்தில் இலவசமாக முளைத்துகிடக்கும் மூலிகை கரிசலாங்கண்ணி..

இளமையைகாக்கும் கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி கீரை ஈரமான நிலத்தில் வளரும் இயல்புடையது. வயல் வரப்புகளில் அதிகமாக தோன்றும் இதில் இரு வகை உண்டு. ஒன்று மஞ்சள் நிறத்திலும், இன்னொன்று வெள்ளை நிறத்திலும் பூ பூக்கும். இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. இந்த கீரையில் தங்கச் சத்து உள்ளதால், இதை பொற்றிலை என்றும் பொற்கொடி என்றும் அழைக்கிறார்கள்.
கரிசலாங்கண்ணி கீரை ஈரமான நிலத்தில் வளரும் இயல்புடையது. வயல் வரப்புகளில் அதிகமாக தோன்றும் இதில் இரு வகை உண்டு. ஒன்று மஞ்சள் நிறத்திலும், இன்னொன்று  வெள்ளை நிறத்திலும் பூ பூக்கும். இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

இந்த கீரையில் தங்கச் சத்து உள்ளதால், இதை பொற்றிலை என்றும் பொற்கொடி என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு காயகற்ப மூலிகை. தினமும் இதை உணவில் பயன்படுத்தலாம்.

இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சுரப்பிகளை செயல்பட தூண்டும்.  உடலை உறுதிப்படுத்தும். இரும்புச்சத்தும், ஏராளமான தாதுசத்துகளும் இந்த கீரையில் உள்ளன.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும், பத்தியம் இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.

கண், முகம் வெளுத்து, கை, கால், மற்றும் பாதங்கள் வீங்கி சிறுநீர் தடையுடன் சிலருக்கு கடுமையான ரத்தசோகை ஏற்படும். அதற்கு ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்கவேண்டும்.
கரிசலாங்கண்ணி சாறு 100 மி.லி, நல்லெண்ணெய் 100  மி.லி, அதிமதுரம் 10 கிராம் போன்றவைகளை சேர்த்து காய்ச்சி, 5 மி.லி வீதம்  காலையும், மாலையும் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் குரல் கம்மல் குணமாகும்.

இதனை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். கண்பார்வை அதிகரிக்கும். முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக  வளரும்.
இந்த கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிறமடையும். ஈறுகள் பலப்படும். அதன் சாற்றை நாக்கு, உள்நாக்கில் மேலும், கீழும் விரல்களால் தேய்த்துவந்தால் மூக்கு, தொண்டை பகுதியில் உள்ள கபம் வெளியேறும்.

இவ்வாறு செய்யும்போது உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் வாந்தியாக வெறியேறி விடும். இதனால் ஜீரண உறுப்புகள் தூய்மை அடைந்து கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்றவை நன்றாக வேலை செய்யும்.

சுவாசப்பை கழிவுகள் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள யூரியா போன்ற கழிவுகளையும் கரிசலாங்கண்ணி நீக்கும். ஒற்றை தலைவலியால் துன்பப்படுகிறவர்கள் இந்த கீரையை மென்று உள்நாக்கில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் பித்தம் நீங்கி தலைவலி அகலும்.

மேற்கண்டவாறு தினமும் கீரையை மென்று பல்துலக்குவது தந்த சுத்தி என்றழைக்கப்படுகிறது.

பச்சையாக கீரை கிடைக்காதவர்கள் ஒருதேக்கரண்டி கீரை பொடியை கொண்டும் தந்த சுத்தி செய்யலாம்.

கரிசலாங்கண்ணியை கொண்டு பல்வேறு மருந்துகள் தயார் செய்யப்படுகிறது. கூந்தல் தைலங்களிலும் இதன் சாறு சேர்க்கப்படுகிறது. இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்தால் என்றும் இளமையுடன் திகழலாம்.

கீரை பால்

கரிசலாங்கண்ணி  கீரை பொடி - 100 கிராம்
முசுமுசுக்கை பொடி- 25 கிராம்
தூதுவளை பொடி    - 25 கிராம்
சீரகம் பொடி-25 கிராம்
பனங்கற்கண்டு - தேவைக்கு
பால்-200 மி.லி

செய்முறை: எல்லா வகை பொடிகளையும் ஒன்றாக்கவும். அவற்றை 100 மி.லி நீரில் கலந்து கொதிக்கவைத்து வடிக்கட்டிக் கொள்ளுங்கள். அத்துடன் பாலை சூடாக்கி ஊற்றுங்கள். பனங்கற்கண்டு சேர்த்து பருகுங்கள்.

இந்த பானத்தை காலையில் காபி, டீக்கு பதில் சாப்பிட்டு வரலாம். இது கல்லீரலை பலப்படுத்தி, ஜீரண உறுப்புகளை நன்றாக இயங்கச் செய்யும்.

கீரை கூட்டு

கரிசலாங்கண்ணி  கீரை -1 கட்டு
சின்ன வெங்காயம்-100 கிராம்
சீரகம்-1 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு-3மேஜைகரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கு

செய்முறை: கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள். சிறிய வெங்காயத்தையும் நறுக்குங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கீரையை கொட்டி வதக்கி, நீர் தெளித்து வாணலியை மூடி சிறு தீயில் வேக வையுங்கள். துவரம் பருப்பு, உப்பு சேர்த்து வெந்ததும் இறக்குங்கள்.

இதை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் நன்கு வேலை செய்யும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்த சோகை நீங்கும்.

துவையல்

கரிசலாங்கண்ணி  கீரை-2  கைப்பிடி
காய்ந்த மிளகாய்-2
உளுத்தம் பருப்பு    -1 தேக்கரண்டி
மிளகு    - 1/2  தேக்கரண்டி
புளி-    சிறிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய்    -2 தேக்கரண்டி
உப்பு    -தேவைக்கு

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி  உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும். அத்தோடு கீரையை நறுக்கிப்போட்டு கிளறுங்கள். அடுப்பில் இருந்து இறக்கி, ஆறிய பின்பு அரைத்து உப்பு சேருங்கள்.

இதை சூடான சாதத்துடன் கலந்து, நெய்யும் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். தலைமுடி   உதிர்தல், இளவயதில் தோன்றும் நரை போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு இது நல்ல பலனைத்தரும்.

சத்து பானம்

கீரை பெரிய கட்டு     -1
நாட்டு சர்க்கரை-    400 கிராம்
பாதாம் பருப்பு-50 கிராம்
பிஸ்தா பருப்பு-50 கிராம்   
சாரை   பருப்பு-50 கிராம்
முந்திரி பருப்பு-50 கிராம்

செய்முறை: கரிசலாங்கண்ணி கீரையை நறுக்கி அரையுங்கள். அதில் சிறிதளவு நீர் கலந்து வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.

500 மி.லி. சாற்றில் நாட்டு சர்க்கரையை கலந்து நன்கு கொதிக்க வையுங்கள். கொதித்து வரும்போது நீர் சுண்டி பச்சை நிறத்தில் சர்க்கரை போல படியும். அதை சேகரித்து ஆற வைத்து, அத்துடன் மேலே சொன்ன பருப்புகளை தூளாக்கி சேர்க்கவும்.

இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து, பாலில் கலந்து குடித்தால் ரத்தசோகை நீங்கும். இளநரை போகும். தலைமுடிசெழித்து வளரும். கரிசலாங்கண்ணியில் கரோட்டின் சத்து அதிகம் உள்ளதால் கண்பார்வை மேம்படும்.
---------------------------------------------------
கரிசலாங்கண்ணி

மருத்துவக் குணங்கள்:
கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது.
பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.
கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.
கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்து சாறெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்கு குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும். உப்பில்லாப் பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்.
மஞ்சள் காமாலைமுதல் அனைத்து வகை காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.
கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.
கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கதிற்கும் கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும்.

பெண்களின் பெரும்பாட்டு நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாறு நல்ல பலன் அளிக்கும்.
குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.
இரத்தசோகை நோய்க்கு கரிசலாங்கண்ணி ஒரு பங்கும், வெல்லம் இரண்டு பங்கும், எள் ஒரு பங்கு வீதம் தேவைக்கு ஏற்ப சேகரித்து வைத்துக் கொண்டு, வெல்லத்தைப் பாகாக்கி மற்ற இரண்டு பொருள்களையும் பொடி செய்து சேர்த்துக் கிண்டி, கேக் வடிவில் தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்ல ரத்தம் உண்டாகும்; நினைவாற்றல் அதிகரிக்கும்.
கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.
கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் இளநரை மாறிவிடும்.
கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.
கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.
கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 500 மில்லி சேகரித்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து இக்கலவையில் சேர்த்து தைலமாய் எரித்து, பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி விடும். நல்ல தூக்கம் வரும். கண் நோய்கள், காது நோய்கள் ஒற்றைத் தலைவலி முதலியன நீங்கிவிடும்.
புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொண்டு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்தி கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால் இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும்.

கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.

நன்றி
R.அன்பரசு.

No comments:

Post a Comment